முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தி லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை முன்னெடுத்து வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ரணில் விக்ரமசிங்கவை இன்று காலை வாக்குமூலம் அளிப்பதற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதற்கமைய இன்று காலை விசாரணைக்கு முன்னிலையாகிய ரணில் விக்ரமசிங்கவை, குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று பிற்பகல் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் இன்று மாலை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ரணில் விக்கிரமசிங்கவை பிணையில் விடுவிக்குமாறு அவரது தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
எனினும், சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி திலீப பீரிஸ், ரணில் விக்கிரமசிங்கவை பிணையில் விடுவிப்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிவான், பிணைக் கோரிக்கை தொடர்பான உத்தரவை 30 நிமிடங்களின் பின்னர் அறிவிப்பதாக கூறி நீதிமன்ற அமர்வை ஒத்திவைத்தார்.
நீதிமன்றம் மீண்டும் கூடவிருந்த நிலையில் நீதிமன்றத்தில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.
இதன் பின்னர் மின்சார சபை ஊழியர்கள் வந்து மீண்டும் மின்சாரத்தை வழங்கிய போதும், நீதிமன்றம் மீண்டும் கூடவில்லை.
இலங்கையின் வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பெருமளவிலான ஆதரவாளர்கள் குழுமியுள்ளனர். இதனால் பதற்றமான நிலை காணப்படுகிறது.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ச, ரவூப் ஹக்கீம், வஜிர அபேவர்த்தன, ருவன் விஜேவர்த்தன உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் நீதிமன்ற வளாகத்தில் குழுமியுள்ளனர்.


