சுவிட்சர்லாந்தில் கத்தோலிக்க திருச்சபையை விட்டு வெளியேறுபவர்களின் அலை கடந்த ஆண்டு தணிந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், தேவாலயத்தில் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த ஆய்வின் வெளியீடு, திருச்சபையை விட்டு வெளியேறுபவர்களின் அலைக்கு வழிவகுத்தது.
ஒரு வருடம் கழித்து- 2024ஆம் ஆண்டு சுவிஸ் கத்தோலிக்க திருச்சபை 36,782 வெளியேற்றங்களைப் பதிவு செய்ததாக சுவிஸ் ஆயர் சமூகவியல் நிறுவனம் (SPI) இன்று அறிவித்தது.
2023 ஆம் ஆண்டில் 67,497 உறுப்பினர்கள் கத்தோலிக்க திருச்சபையை விட்டு வெளியேறியிருந்தனர். இதனை விட கடந்த ஆண்டு 46% குறைந்துள்ளது.
இந்த வீழ்ச்சி இருந்த போதிலும், தேவாலயங்களை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது என்று சுவிஸ் கத்தோலிக்க திருச்சபையால் ஆதரிக்கப்படும் சென் காலனை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், வெளியேறுபவர்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வரும் போக்கை காட்டுகிறது.
வெளியேறுபவர்களுக்கு மேலதிகமாக அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மற்றும் ஞானஸ்நானம் பெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவது என்பனவும் இதில் பங்களிக்கின்றன.
கடந்த ஆண்டு நிலவரப்படி சுவிட்சர்லாந்தில் உள்ள 2.73 மில்லியன் மக்கள் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
மூலம்- swissinfo

