21.7 C
New York
Tuesday, August 11, 2026

அதிவேக வைஃபை வசதியுடன் முதல் விமானத்தை இயக்குகிறது லுஃப்தான்சா.

அமெரிக்க நிறுவனமான ஸ்டார்லிங்கின் அதிவேக வைஃபை வசதியுடன் கூடிய தனது முதல் விமானத்தை லுஃப்தான்சா அறிமுகப்படுத்துகிறது – ஸ்விஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் (SWISS) விரைவில் இதைப் பின்பற்ற உள்ளது.

லுஃப்தான்சா குழுமம், அமெரிக்க நிறுவனமான ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் இணைய வசதியைத் தனது முழு விமானக் குழுவிற்கும் வழங்கி வருகிறது. லுஃப்தான்சாவின் கூற்றுப்படி, இந்த புதிய வைஃபை சேவையுடன் புறப்படும் முதல் விமானம், தாய் நிறுவனமான லுஃப்தான்சாவால் இயக்கப்படும் ஒரு நடுத்தர தூர ஏர்பஸ் A320neo விமானமாகும்.

இது ஓகஸ்ட் 19 ஆம் திகதி இயக்கப்படும். லுஃப்தான்சாவின் துணை நிறுவனமான SWISS, இந்த அரையாண்டின் இறுதிக்குள் இதைப் பின்பற்ற உள்ளது.

இதன் மூலம் பயணிகள், விமானத்தில் உள்ள அதிவேக இணையத்தை தங்கள் சொந்த சாதனங்கள் வழியாக இணையத்தில் உலாவவும், உள்ளடக்கங்களை ஸ்ட்ரீம் செய்யவும் அல்லது தங்கள் நிறுவன வலையமைப்புகளில் பணியாற்றவும் முடியும்.

பல சமயங்களில், இந்த ஆன்லைன் அலைவரிசை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள இணைய இணைப்புகளை விட அதிகமாக இருக்கும் என்று லுஃப்தான்சா கூறுகிறது.

இதன் மூலம், ஸ்டார்லிங்கை வழங்கும் உலகின் முதல் விமான நிறுவனங்களில் ஒன்றாக இந்த ஜெர்மன் குழுமம் திகழ்கிறது.

பில்லியனர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்தச் சேவையை வழங்குகிறது.

இந்தநிறுவனம் இந்தச் சேவைக்காக 9,000-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியுள்ளது. பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே ஸ்டார்லிங்கிற்கு மாறுவதற்கான தங்கள் விருப்பத்தை அறிவித்துள்ளன. ஐரோப்பாவில், ஏர் பால்டிக் முன்னோடிகளில் ஒன்றாகும்.

லுஃப்தான்சா நிறுவனம், அதன் அனைத்து ஸ்டேட்டஸ் வாடிக்கையாளர்களுக்கும், அத்துடன் “டிராவல் ஐடி” எனப்படும் பயனர் கணக்கை உருவாக்கும் பயணிகளுக்கும் இணைய அணுகல் கட்டணமின்றி தொடரும் என்று அறிவித்துள்ளது.

நிறுவனம் முதலீட்டுத் தொகையை வெளியிடவில்லை. திட்டமிடப்பட்ட பராமரிப்பு நிறுத்தங்களின் போது விமானங்களில் தேவையான தொழில்நுட்பம் நிறுவப்படும்.

“2029-க்குள், குழுமத்தின் சுமார் 850 விமானங்களும் இந்தத் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருக்கும்,” என்று நிர்வாகக் குழு உறுப்பினர் டீட்டர் வ்ராங்க்ஸ் விளக்குகிறார்.

குழுமத்தின் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விரிவாக்கத் திட்டங்கள் ஏற்கனவே உள்ளன என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார். லுஃப்தான்சாவின் A320 விமானக் குழுமத்துடன், அதன் துணை நிறுவனங்களான ஸ்விஸ், ஓஸ்ரியன் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் ஆகியவற்றால் இயக்கப்படும் விமானங்களும் முதலில் பொருத்தப்படும்.

புதிய சேவைக்கான பயனர் வழிகாட்டுதல்கள் “லுஃப்தான்சா குழும வைஃபை” இணையதளம் வழியாக வகுக்கப்பட்டுள்ளன; சேவையைப் பயன்படுத்துவதற்கு முன்பு பயனர்கள் இந்த வழிகாட்டுதல்களுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.

மற்ற விதிமுறைகளுடன், பயணிகள் ஒலி மற்றும் காணொளி உள்ளடக்கங்களை இயக்கும்போது எப்போதும் ஹெட்ஃபோன்களை அணிய வேண்டும், குரல் மற்றும் காணொளி அழைப்புகளை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், மேலும் விமானத்தில் இருந்து நேரலை ஒளிபரப்புகளைச் செய்யக்கூடாது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles