11.5 C
New York
Monday, November 9, 2026

சுவிட்சர்லாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரம் – வீடுகளின் வெப்பமூட்டும் எண்ணெய்த் தொட்டிகள் போதிய அளவு நிரப்பப்படவில்லை!

ரைன் நதியில் நீர்மட்டம் உயராவிட்டால் அவசரகால கையிருப்பிலிருந்து Heizöl வெளியிட வேண்டிய நிலை!

சுவிட்சர்லாந்தில் வீடுகளுக்கான வெப்பமூட்டும் எண்ணெய் (Heizöl) விநியோக நிலைமை மிகவும் நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டில் மூன்றில் ஒரு பங்கு குடியிருப்பு வீடுகள் வெப்பமூட்டுவதற்கு Heizöl பயன்படுத்துகின்றன.

- Advertisement -

மத்திய அரசின் தகவலின்படி, தற்போதைக்கு விநியோகம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது.

ரைன் நதியில் நீர்மட்டம் குறைவு

ரைன் நதியில் நீர்மட்டம் தொடர்ந்து மிகவும் குறைவாக இருப்பதால், எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் வழக்கமான அளவில் சரக்குகளை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில கப்பல்களால் பயணத்தையே மேற்கொள்ள முடியவில்லை.

இந்த நிலை பல மாதங்களாக நீடித்து வருவதால், சுவிட்சர்லாந்துக்கான எண்ணெய் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில் போக்குவரத்திலும் சிக்கல்

நதிவழிப் போக்குவரத்துக்கு மாற்றாக ரயில்கள் மூலம் எண்ணெயைக் கொண்டு வர இறக்குமதியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். எனினும், ஜேர்மனியில் ரயில் போக்குவரத்துக்கான கொள்ளளவு பற்றாக்குறை, கட்டுமானப் பணிகள் மற்றும் போக்குவரத்துத் தடைகள் காரணமாக இந்த மாற்று வழியிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

எண்ணெய் விலை உயர்வால் காலியான தொட்டிகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக 2026 மார்ச் மாதம் ஆரம்பித்த போரின் விளைவாக எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.

இதனால் பல வீட்டு உரிமையாளர்கள் விலை குறையும் வரை காத்திருந்து பின்னர் எண்ணெய் நிரப்பிக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர்.

இதன் விளைவாக, 2026 செப்டம்பர் மாத இறுதியில் சுவிட்சர்லாந்தில் Heizöl விற்பனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாக Migrol நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவசரகால எண்ணெய் கையிருப்பு திறக்கப்படுமா?

தற்போதைய விநியோக நெருக்கடி மேலும் தீவிரமடைந்து, ரைன் நதியில் நீர்மட்டம் விரைவில் உயராவிட்டால், சுவிட்சர்லாந்து அரசு தனது கட்டாய அவசரகால எண்ணெய் கையிருப்பிலிருந்து (Pflichtlager) Heizöl-ஐ வெளியிட வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதற்கு முன்னர் விமான எரிபொருள் விநியோக நெருக்கடியைச் சமாளிக்கவும் அரசு அவசரகால கையிருப்பைத் திறந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் குளிர்காலம் நெருங்கும் நிலையில், வீடுகளுக்கான வெப்பமூட்டும் எண்ணெய் விநியோகம் தொடர்பான இந்த நிலைமை கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles