நியூசிலாந்தில் உள்ள சுவிஸ் இராஜதந்திரி ஒருவர் ஜூலை 25ஆம் திகதி சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியில், விடுமுறை பயணத்தில் இருந்த போது மரணமடைந்துள்ளார்.
49 வயதான இராஜதந்திரியின் மரணத்தை சுவிஸ் வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதுடன் அவரது குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த இராஜதந்திரி 2021 முதல் நியூசிலாந்தில் பணிபுரிந்து வந்தார். அதற்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகள் சுவிஸ் வெளியுறவு சேவையில் பணிபுரிந்தார்.
தனது மகனின் பட்டமளிப்பு விழாவிற்காக பயணத்தை மேற்கொண்டிருந்த போதே மரணமாகியுள்ளார்.
பக்டீரியா தொற்று காரணமாக செப்சிஸ் மற்றும் இறுதியில் இதய செயலிழப்புக்கு வழிவகுத்து மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இருப்பினும், இறப்புக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், நியூசிலாந்தில் உள்ள சுவிஸ் தூதுவர் Viktor Vavricka தெரிவித்துள்ளார்.
“ குறித்த பெண் இராஜதந்திரி உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர், அவர் நிறைய பயணம் செய்தார், அடிக்கடி நடைபயணம் சென்றார்.
அவரது குடும்பத்தினரும் வெலிங்டனில் உள்ள அவரது கணவனும் சுவிஸ் தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.
இறந்த இராஜதந்திரி ஒரு மதிப்புமிக்க சக ஊழியர் மட்டுமல்ல, நம்பகமான நண்பரும் கூட” என்றும் சுவிஸ் தூதுவர் Viktor Vavricka தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சும் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை ஒப்புக்கொண்டது.
மூலம்- 20min