இலங்கையில் 10 ஆவது நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. மாலை 4 மணி வரை வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில், அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 8,361 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
22 தேர்தல் மாவட்டங்களிலும், அரசியல் கட்சிகளின் சார்பில் 408 வேட்பாளர் பட்டியல்களில் 5,015 வேட்பாளர்களும், 282 சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 3,346 வேட்பாளர்களும் போட்டிக்களத்தில் உள்ளனர்.
வேட்பாளர் பட்டியலில் இருந்து 196 உறுப்பினர்களும், தேசியப் பட்டியலின் மூலமாக 29 பேருமாக மொத்தம் 225 பேர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.
29 தேசியப் பட்டியல் ஆசனங்களை நிரப்புவதற்காக, 27 அரசியல் கட்சிகள் சார்பில், 516 பேரும் 2 சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 11 பேரும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தேர்தலில் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தேர்தல் பணிகளில், 152,000 தேர்தல் அதிகாரிகளும், 27,000 பொலிசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
54 வாக்கு எண்ணும் நிலையங்களில் 2,034 வாக்கு எண்ணும் மண்டபங்கள் அமைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணும் பணி மேற்கொள்ளப்படும்.
452 வாக்கு எண்ணும் மண்டபங்களில், தபால் வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிக்கும், 1,582 வாக்கு எண்ணும் மண்டபங்களில் ஏனைய வாக்குகளையும் எண்ணும் பணி இரவு 7.15 மணிக்கும் ஆரம்பிக்கப்படும்.
22 தேர்தல் மாவட்டங்களிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணிகளில் 80 ஆயிரம் தேர்தல் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள்.