ஈக்வடோரியல் கினியா குடியரசின் மக்களுக்கு 22.8 மில்லியன் பிராங் மதிப்புள்ள சொத்துக்களை சுவிட்சர்லாந்து, திருப்பிக் கொடுக்கவுள்ளது.
இரு நாடுகளும் திங்களன்று இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக மத்திய வெளியுறவுத் துறை (FDFA) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா சட்டமா அதிபர் அலுவலகத்தால் குற்றவியல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தக் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மத்திய ஆபிரிக்க அரசின் ஜனாதிபதியின் மகன்களில் ஒருவருக்குச் சொந்தமான ஆடம்பரப் பொருட்களே இவையாகும்.
ஜெனீவா குற்றவியல் அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவின்படி, சொத்துக்கள் சமூகத் திட்டத்தின் ஒரு பகுதியாக மக்களுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும்.
அதன்படி சுவிஸ் வெளியுறவுத் துறை அந்த நடைமுறைகளைக் கையாளும் பணியை மேற்கொண்டது.
இந்தப் பணம் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று அது மேலும் கூறியது.
குறிப்பாக, நாட்டின் பிரதான நிலப்பகுதியில் உள்ள நான்கு மாகாணங்களில் ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் அணுகலை மேம்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்களின் அடிப்படை பயிற்சி மற்றும் தொடர் கல்வியை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மூலம்-swissinfo

