5.3 C
New York
Tuesday, December 30, 2025

நண்பனை கடத்திச் சென்று தாக்கிய 7 பேர் கைது.

வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார்  தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவரை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சில இளைஞர்கள் கைது செய்யப்படட்டனர்.  அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.

வவுனியா,  பூந்தோட்டம்     பகுதியை சேர்ந்த  இளைஞன்    ஒருவர் கடந்த புதன்கிழமை மாலை  தனது வீட்டில் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளார். அங்கு  உறவினர்கள்,  நண்பர்கள் என பலர் வந்திருந்தனர்.

அங்கு வந்த அவரது சில நெருங்கிய நண்பர்கள் மது போதையில் இருந்துள்ளனர்.  இதன்போது,  இளைஞர்கள் குழுக்களாக பாட்டுப்பாடி  நடனம்  ஆடினார்கள். 

இந்த நேரத்தில் மதுபோதையில் இருந்த நண்பர்கள் பிறந்தநாள் நிகழ்வுக்காக வந்த  பெண் நண்பிகளுடன்  சேர்ந்து நடனமாட முற்பட்ட வேளை  பிறந்தநாள் கொண்டாடிய நண்பன் அதனை தடுத்துள்ளார்.

இதனால்  நெருங்கிய நண்பர்கள்  மற்றும்  இளைஞர் குழுக்களுக்கிடையில்  மோதல் ஏற்பட்டுள்ளது.  இதனை அங்கு இருந்த உறவினர்கள்  சமரசம் செய்து வைத்துள்ளனர்.

அதன் பின்னர்  வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று பிறந்தநாள் கொண்டாடிய  இளைஞனை கடத்தி  சென்று குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்து     கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாழடைந்த  வீட்டில் இளைஞனை அடைத்து வைத்து விட்டு கடத்தியவர்கள் தப்பி சென்ற நிலையில், கடத்தப்பட்ட  இளைஞனை மீட்டு அவரை  வவுனியா மாவட்ட  பொது வைத்தியசாலையில் பொலிசார் அனுமதித்துள்ளனர்.      

இச்சம்பவம் தொடர்பில் 20 வயது தொடக்கம் 22 வயது வரையுள்ள 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதில் பட்டைகாடு பகுதியைச் சேர்ந்த 3  பேரும், வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் கோயில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவருவரும் உள்ளடங்கியுள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது  கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட   மூன்று   மோட்டர் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மோட்டார்  சைக்கிள்களையும் கைது செய்யப்பட்ட இளைஞர்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles