15.6 C
New York
Tuesday, May 5, 2026

தமிழக முதல்வராகிறார் விஜய்- 107 தொகுதிகளில் முன்னிலை.

தமிழக சட்டமன்ற வரலாற்றில் மூன்றாவது சக்தியான தமிழக வெற்றிக் கழகம், 107 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டப் பேரவையில் அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு, 118 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம், 107 ஆசனங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

இதனால் தொங்கு சட்டமன்றம் அமையவுள்ளதுடன், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆளும்கட்சியான திமுக இந்த தேர்தலில் பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ள போதும், கூட்டணியாக 77 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

திமுக கூட்டணியில், திமுக 55 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், தேமுதிக 1 தொகுதியிலும், ஏனைய கட்சிகள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளன.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலரும் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

அதிமுக கூட்டணி 53 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. அதிமுக 46 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகளான பாமக 5, பாஜக 1, அமமுக 1 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நிலையில் இருக்கின்றன.

தவெக தனிக் கட்சியாக 106 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள போதும், பிற கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தமிழக முதல்வராக விஜய் விரைவில் பதவியேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles