Oberriet இல் உள்ள தபால் நிலையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை திங்கள்கிழமை மாலை, St. Gallen கன்டோனல் பொலிசார் கைது செய்தனர்.
கொள்ளையின் போது இரண்டு ஊழியர்களுக்கும் உடல் ரீதியாக காயம் ஏற்படவில்லை மற்றும் பணம் எதுவும் திருடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக ந்பர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் போது, விபத்துக்குள்ளானதாகவும், அவர்கள் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிசார் குறிப்பிட்டனர்.
தபால் நிலையத்தின் பின்புற நுழைவாயிலில் நுழைந்த இருவரும், 19 வயதுடைய ஊழியரை மிரட்டி கட்டிவைத்துள்ளனர்.
மற்றொரு நபர் நிலைமையைக் கவனித்து, ஒரு கொள்ளையனை அணுகிய போது கைகலப்பு ஏற்பட்டது என்று கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஆயுதம் வைத்திருந்ததை அந்த நபர் அவதானித்துள்ளார்.
கைகலப்பை அடுத்து, இருவரும் தங்கள் திட்டத்தை கைவிட்டு, வெறும்கையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
திருடப்பட்ட உரிமத் தகடு கொண்ட அந்த மோட்டார் சைக்கிள், A13 நெடுஞ்சாலையில், பொலிஸ் ரோந்துப் படையினரால் அவதானிக்கப்பட்டு, துரத்திச் சென்ற போது, பொலிஸ் ரோந்து வாகனம் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் காயமடைந்துள்ளனர்.
மூலம்.- watson.ch